Wednesday, February 19, 2014

பாட்டி வைத்தியம்

ஊறவைத்த வெந்தயத்தை நன்கு அரைத்து தயிரில் கலந்து 3வேளை சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். வயிற்று கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல்  அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயும் கலந்து குடித்தால் சிறிது நேரத்தில் குணமாகிவிடும். எலுமிச்சை பழச் சாற்றில் ரசம்  செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். 

வெற்றிலை சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வெண்டைக்காயை அடிக்கடி சேர்த்து  வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தை செம்மைப்படுத்தும். ஞாபகசக்தி அதிகரிக்கும். மாதுளம் பழச் சாறுடன், தேன் கலந்து  சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். ரத்தம் சுத்தமடையும். முருங்கைக் கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம்பைக் குழைத்து தொண்டை யில்  தடவிக்கொண்டால் இருமல் நிற்கும். வில்வப் பூக்களை உலர்த்தி, பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும். 

தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவி வர, சருமம் தங்கம் போல் மின்னும். பாசிப்பயிறு மாவை  வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு பிரச்னை சரியாகும். கிராம்பு, கற்பூரம், ஓமம் ஆகியவற்றை ஒரு சிட்டிகை வீதம் எடுத்து  பொடி செய்து வீக்கம் உள்ள ஈறுகளில் சிறிது நேரம் வைத்து வாய் கொப்பளிக்க, ஈறு வீக்கம் குறையும். அருகம்புல்லையும் மஞ்சளையும் சேர்த்து  அரைத்து படர்தாமரையில் பூச, நல்ல நிவாரணம் கிடைக்கும். 

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் பன்னீரையும் சந்தனத்தையும் அரைத்து முகத்தில் தடவ, சருமம் பொலிவு பெறும். கிராம்பை வெற்றிலையுடன்  சேர்த்துப் போட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும்.  வெந்தயக் கீரையுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்னியாக  சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண், இருமல் குணமாகும்.  வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், மிளகு அனைத்தையும் தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து, தினமும் சிறிதளவு வெறும் வயிற்றில்  சாப்பிட உடல் எடை குறையும்.

மஞ்சள் தூளை நெய்யுடன் கலந்து காய்ச்சி சாப்பிட்டால் இருமல் நிற்கும். கிராம்பு பொடியுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால், உடல் உறுப்புகள்  பலமாகும். பேரிக்காயை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். எலுமிச்சை பழச்சாறு, தேன் கலந்து குடிக்க வறட்டு  இருமல் குணமாகும்.

No comments:

Post a Comment